திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது ஆரணி ஆறு. இந்த ஆற்றுக்கு தண்ணீர் கொடுக்கும் ஊற்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்ணித் மலைப்பகுதியில் இருந்து தொடங்குகிறது. அங்கு இருந்து பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து வரும் தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வழியாக பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை வந்தடைகிறது. பின் அதன் வழியாக பழவேற்காடு பகுதியில் இருந்து வங்கக்கடலை சென்றடைகிறது. ஆரணி ஆற்றின் மொத்த நீளம் 114.8கி.மீ., ஆகும். ஆரணி ஆற்றின் தண்ணீரை நம்பியே அதன் கரையோர பகுதியில் உள்ள சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில், ஆரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்காக பொன்னேரி, ஏலியம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் ஆரணி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரமும், ஒரு கிலோமீட்டர் நீளமும் கொண்ட சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆற்றில் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் 30 அடி ஆழத்திற்கு குழிதோண்டி ஆற்று மணலை சுரண்டி எடுக்கின்றனர். ஆற்றின் கரையை உடைத்து, அதன் வழியாக கொள்ளையடித்த மணலை 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் எடுத்துச்சென்று ஒரு லோடு ரூ.8,000 வீதம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அந்தபகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இத்துடன், மழைக் காலங்களில் ஆற்றில் இருந்து வெள்ள நீர் வெளியேறி குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் நீரில் மூழ்கும் நிலை உருவாகலாம் எனவும் அச்சம்கொள்கின்றனர். இதனைத்தொடர்ந்து, மணல் கொள்ளையை தடுத்துநிறுத்தக்கோரி வட்டாட்சியர் முதல் ஆட்சியர் வரை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை புகார் மனு அளித்தனர். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரியும், மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், செங்குன்றம்-திருவொற்றியூர் இடையே செல்லும் சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.