திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான ஆரணி ஆற்றில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்தி சுமார் 4500 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் சராசரியாக 7 முதல் 12 டிஎம்சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. இந்தநிலையில் பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மற்றும் கழிவுநீர் அனைத்தும் ஆற்றில் கொட்டப்படுகிறது. ஆரணி ஆறு முழுவதும் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வனம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் அதன் துணை கால்வாய்கள் ஆற்றுப்படுகை ஆகியவை தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆரணி ஆற்றின் பரப்பளவு வெகுவாக சுருங்கி வருகிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி ஆரணி ஆற்றை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் தரப்பில் பொதுப்பணித்துறை, நீர் ஆதாரத்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிப்பட்டது. எனினும், பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதேபகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற சமூக ஆர்வலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்தவழக்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதிகள் முனீஸ்வரன் நாத் பாண்டே, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை மாநில முதன்மை பொறியாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.