வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கவுண்டன்யா ஆறு மற்றும் பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து சட்ட விரோதமாக சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில், குடியாத்தம் தாலுக்கா காவல்துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, குடியாத்தம் அருகே சின்னலாப்பள்ளி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வந்த காரை காவல்துறையினர் தடுத்துநிறுத்தி சோதனையிட்டபோது, கார் ஓட்டுனர் காரை அந்த இடத்திலேயே விட்டு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, காரை சோதனை செய்ததில் மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதற்கிடையில், சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த குடியாத்தம் தாலுக்கா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.