ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் பாதிக்கப்பட்டு பெண் பத்திரிகையாளர்களுக்கு உதவுவதற்காக இந்திய பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பு நிதி திரட்டி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் எது நடக்க கூடாது என்று உலக நாடுகள் பயந்துக் கொண்டிருந்ததோ, அது அங்கு தற்போது நடந்தேறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த நடவடிக்கையால்,அங்குள்ள பெண்கள் குழந்தைகளின் நிலை என்ன ஆகுமோ என்றிருந்த நிலையில், தற்போது அவர்களை வதைக்கும் சூழல் அங்கு உருவாகியுள்ளது.எதிர்ப்பு,வன்முறை இல்லாத அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று போராடி வரும் பெண்களை தாலிபான் சித்ரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
அதோடு அங்குள்ள பெண் பத்திரிகையாளர்களின் எழுத்து சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது.சில பெண் பத்திரிகையாளர்களை தாலிபான்கள் குறி வைத்துள்ளதால் அவர்கள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக இந்திய பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பு நிதி திரட்டி வருகிறது.இந்த பணி தொடங்கப்பட்ட இரண்டு வாரங்களில் 37 லட்சம் ரூபாய் நிதியை பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பினர் திரட்டியுள்ளனர்.பாஸ்போர்ட் மற்றும் விசா பெறவும், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அன்றாட பொருட்கள் வாங்கவும் நிதியை பயன்படுத்த உள்ளனர்.
இது குறித்து பேசிய.இந்திய பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பின் உறுப்பினர் லட்சுமி மூர்த்தி , “ஆப்கனில் உள்ள பெண் பத்திரிகையாளர்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. எந்த வேலையையும் செய்ய முடியாமல்,எங்கேயும் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களை எந்த வகையிலும் கைவிடக் கூடாது என்ற வகையில் இந்த நிதியை திரட்டி வருகிறோம். “என்றார்