திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கிராமத்தின் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரசாத். 35 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் பனியாற்றி வருகிறார். பிரசாத்க்கு திருமணமாகி மனைவி தனலட்சுமி, மகள் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், குடும்ப பணத் தேவைக்காக ஆன்லைன் கடன் ஆப் மூலம் கடனுதவி பெற விண்ணப்பித்துள்ளார். ரூ. 6 லட்ச கடனுதவி கேட்டு விண்ணப்பித்த போது 30% தொகையை முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்வைப்பு தொகையையுடன், கடன் தொகையையும் சேர்த்து வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுமார் ரூ. 86,000 பணத்தை ஆன்லைன் பணபரிவர்தனை மூலமாக பிரசாத் கடன் தரும் நிறுவனத்திற்கு செலுத்தி உள்ளார். பிரசாத்திடம் முன்வைப்பு தொகையை பெற்றுக்கொண்ட பிறகு, திடீரென ஆன்லைன் கடன் ஆப் சார்பில் கடனுதவி தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பிரசாத் சம்பவம் குறித்து தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்து பணத்தை திரும்ப பெறலாம் என நண்பர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த பிரசாத், மனைவி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்ற போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிக்கண்ட அவரின் மனைவி அதிர்ச்சி அடைந்து அலறினார். தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிரசாத்தை மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதைனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளர். பின்னர், பெரியபாளையம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் கடன் ஆப் மூலம் பணம் தருவதாக கூறி ஏமாற்றியதால் மனஉளைச்சல் அடைந்து தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.