திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, பாஜக தலைவர் அண்ணாமலையை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே திமுக பிரபலங்களை வம்பிழக்கத் தொடங்கிய அண்ணாமலை, தற்போது முதல்வரையும் விட்டுவைக்கவில்லை. அவருடைய துபாய் பயணம் குறித்து அவதூறாகப் பேசினார். இதற்குக் கண்டனம் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்’ என நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், இதற்கு முன்பே பிஜிஆர் நிறுவனம் தொடர்பான சில ஆவணங்களை வெளியிட்டு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதனால் அந்த நிறுவனம்வேறு, ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுதவிர, திமுக எம்பி வில்சன் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு அனுப்பியிருந்தார். இப்படி திமுக சார்பில் அண்ணாமலையிடம் மொத்தம் ரூ.610 கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டது. ஆனால் அண்ணாமலையோ, ‘நீங்கள் கேட்கும் தொகைக்கு எல்லாம் நான் தகுதியே இல்லை’ என்று சொல்லி அவர்களையே திக்குமுக்காட வைத்துவிட்டார். என்றாலும், அண்ணாமலை போடும் கணக்கு தப்பாக இருக்காது என்பதுபோலவே மீண்டும் மீண்டும் அவர்களை வம்புக்கு இழுத்துவருகிறார். சமீபத்தில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கிய தேநீர் விருந்தை, திமுக புறக்கணித்தது. இதுகுறித்துப் பதிலளித்த அண்ணாமலை, ‘அரசியல் காரணத்துக்காகவே ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது’ என்ற குற்றச்சாட்டை வைத்தார். இப்படி தொடர்ந்து திமுகவை வம்புக்கு இழுத்துவரும் அண்ணாமலை, அவர்கள் கேட்கும் நஷ்ட ஈட்டுக்கு அடிபணியவும் இல்லை; திமுகவும் அதை விடுவதாக இல்லை. இதனால் திமுகவுக்கும் அண்ணாமலைக்கும் இடையே நடைபெறும் மோதல், ஒரு தொடர்கதையாகவே ஆரம்பித்துள்ளது என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.