எந்தப் போட்டியாக இருந்தாலும் முதலில் வருகிறவர்களைத்தான் உலகம் கொண்டாடும். ஆனால், விதிவிலக்காகச் சில நேரம் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறவர்கள் மக்கள் மனதில் இடம்பிடித்துவிடுவார்கள். மான்யா சிங்கும் அப்படித்தான் மக்கள் மனங்களைக் கொள்ளைகொண்டு விட்டாள். தன் அழகால் மட்டு மல்ல, தான் பிறந்து வளர்ந்த பின்னணியாலும்தான்!
2020ஆம் ஆண்டுக்கான வி.எல்.சி.சி. ஃபெமினா மிஸ் இந்தியா போட்டிக்கான முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மானசா வாரணாசி ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்றார். மானசாவுக்கு வாழ்த்துகள் குவிந்த அதேநேரம் அந்தப் போட்டியில் ‘ரன்னர் அப்’பாகத் தேர்வுசெய்ப்பட்ட மான்யா சிங்குக்கும் பாராட்டுகள் குவிந்தன. காரணம், அவர் ஆட்டோரிக்ஷா ஓட்டுகிறவரின் மகள்!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் பிறந்தவர் மான்யா. வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர் அல்ல மான்யா. அவரது இளமைக்காலம் வறுமையோடு கழிந்தது. அதை அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தன்னைப் படிக்கவைப்பதற்காகத் தன் அம்மா நகைகளை அடகு வைத்ததையும், வறுமை தாங்க முடியாமல் தான் வீட்டிலிருந்து வெளியேறி, பல்வேறு வேலைகளைச் செய்ததையும் எழுதியிருக்கிறார் அவர்.
“எத்தனையோ இரவுகளை நான் உணவும் தூக்கமும் இல்லாமல் கழித்திருக்கிறேன். எத்தனையோ மதியங்களில் நான் முடிவற்ற பாதையில் மைல் கணக்கில் நடந்தபடி இருந்திருக்கிறேன். ஆனால், நான் சோர்ந்துபோகவில்லை. என் ரத்தமும், வியர்வையும், கண்ணீரும் என் கனவுகளைக் கைகொள்வதற்கான உந்துதலை எனக்குள் விதைத்தன. ஆட்டோ ரிக்ஷாக்காரரின் மகளான எனக்குப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புக்கூடக் கிடைக்கவில்லை. என் வயதையொத்த பதின்பருவத்தினருடன் வேலைக்குச் சென்றேன். நான் அணிந்த ஆடைகள் எங்கள் வறுமையைப் பறைசாற்றின. நான் புத்தகங்கள் வாசிக்க ஏங்கினேன். ஆனால், அந்த அதிர்ஷடம் என் பக்கமில்லை. நாம் பட்டம்பெறுவதற்காக என் பெற்றோர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. என் படிப்புக்காக நகைகள் உட்பட கையில் இருந்த அனைத்தையும் அடகு வைத்தார்கள். எனக்குச் சரியாகச் சாப்பாடுகூடத் தர முடியாத நிலை. அதனால் 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போதும் படிப்பை நிறுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். மாலையில் ஒரு உணவகத்தில் பாத்திரங்களைக் கழுவும் வேலையைச் செய்தேன். இரவில் கால்சென்டரில் வேலை செய்தேன். ஆட்டோவுக்குத் தர பணம் இல்லாததால் எத்தனையோ நாட்கள் எத்தனையோ இடங்களுக்கு நடந்தே சென்றிருக்கிறேன். இந்த அழகிப் போட்டியில் வென்றதன்மூலம் என் அப்பா, அம்மா, தம்பி மூவரையும் உயர்த்துவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் பொறுப்புடன் உழைத்தால் எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் சாதிக்க முடியும் என்பதை என் வெற்றியின்மூலம் இந்த உலகத்துக்குச் சொல்கிறேன்” என்று எழுதியிருக்கிறார் மான்யா ஓம்பிரகாஷ் சிங். எதையும் சாதிக்க வறுமை தடையல்ல என்பதற்கு மான்யாவைவிடச் சிறந்த உதாரணம் வேண்டுமா என்ன?