அலைபாயும் குஷ்பு!
குஷ்பு…
‘வருஷம் 16’ படத்தில் அவர் நாயகியாக அறிமுகம் ஆனபோது அவருடைய பாதைகள் அனைத்தும் தேசிய அளவில் நுணுக்கமாகப் பார்க்கப்படும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
சின்ன தம்பி, அண்ணாமலை என்று எத்தனையோ வெற்றிப் படங்களின் நாயகியாக உயர்ந்தவர் குஷ்பு.
குஷ்பு பெயரில் இட்லி சுட்டுச் சாப்பிட்டான் தமிழன். குஷ்பு பெயரில் புடவைகள், ரவிக்கைகள் விற்றன. குஷ்பு என்ற கதாநாயகி தமிழன் மனதில் நீங்காத இடம் பிடித்தார். குஷ்புவுக்கு கோயிலே கட்டிக் கும்பிட்டான் தமிழன்.
திரை பிம்பங்கள் தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன என்பதற்கு குஷ்பு ஒரு முக்கியமான உதாரணம்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் குஷ்பு பெரிய வெற்றி பெற்றார். தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பிலும் சாதனை புரிந்த குஷ்புவுக்கு எப்போதும் அரசியல் வேகம் உள்ளூர இருந்திருக்கிறது. ஆனால் அதை எப்படி வடிவமைப்பது என்பதில் குஷ்புவுக்குத் தீராத குழப்பம் இருந்திருக்கிறது.
சர்ச்சை கருத்துக்களைச் சொல்லிவிட்டு அதில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து மீள்வதற்கு இன்னொரு சர்ச்சையைத் தொடங்குவது எப்போதும் அவருடைய இயல்பாக இருந்திருக்கிறது.
2005இல் ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் எய்ட்ஸ் தொடர்பான ஆய்வுக் கட்டுரையில் குஷ்பு, ‘எந்த ஒரு படித்த ஆணும் தன் மனைவி கன்னியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. திருமணத்திற்கு முந்தைய பாலுறவின்போது பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தன. அவர் மீது செருப்புகளும், அழுகிய முட்டைகளும் வீசப்பட்டன. வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியில் உச்சநீதிமன்றம் அவருக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.
அரசியல்தான் தனக்கு அடைக்கலம் என்று நினைத்த குஷ்பு 2010இல் திமுகவில் இணைந்தார். 2011இல் ஒரு எம்எல்ஏ ஆக முடியும் என்று கனவு கண்டிருந்த குஷ்புவுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. பிரச்சார நட்சத்திரமாக அவரைச் சுருக்கிப் பார்த்தது திமுக.
அதற்குள் கருணாநிதி குடும்பத்தினர் பலருக்கு குஷ்பு மீது அதீத கோபம் மிகுந்தது. ஸ்டாலின்தான் கருணாநிதியின் அரசியல் வாரிசா என்ற கேள்விக்கு பொதுக்குழுதான் அதை முடிவு செய்யும் என்று அவர் ஒரு பத்திரிகையில் கூறினார்.
ஸ்டாலின் ஆதரவாளர் கள் கொதித்து எழுந்தார்கள். குஷ்புவுக்கு மிரட்டல்கள் வந்தன.
குஷ்பு திமுகவிலிருந்து விலகினார்.
ஒரு கட்சியின் மன நிலை என்ன, த்வனி என்ன என்பதைப் புரிந்து கொண்டு, தேவைக்கேற்ப நெளிவு சுளிவுகளோடு அரசியலை நகர்த் திக்கொண்டு போகி றவர்கள்தான் எப் போதும் அரசியலில் வென்றிருக்கிறார்கள். எதைப் பற்றிப் பேசினாலும் ஒரு பெரிய கட்சி பொறுத்துக்கொள்ளும் என நினைத்துக்கொண் டிருந்தது குஷ்புவின் தவறான அரசியல் கணக்கு. அவருடைய பக்குவமின்மை திமுகவில் இருந்தபோது வெளிப்பட்டது.
திமுகவிலிருந்து விலகியதும் குஷ்பு பாஜகவில் பேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று வதந்திகள் உலவின.
காங்கிரசா, பாஜகவா என்று ஒரு தனி நபர் பேர நாடகம் நடத்தியது அவருடைய அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியது.
2014இல் வந்தாரை வாழ வைக்கும் காங்கிரசில் குஷ்பு சேர்ந்தார். அகில இந்திய செய்தித்தொடர்பாளர் பொறுப்பும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பு கிடைத்துவிடும் என்று அவர் எதிர்பார்த்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் கோஷ்டியாளராக மாறி வலம் வந்தார் குஷ்பு. திருநாவுக்கரசரோடு அவருக்குப் பொதுவெளியில் உரசல்கள் வந்தன. கட்சியைவிட தன்னைப் பெரிதாக நினைத்துக்கொள்பவர் குஷ்பு என்ற பிம்பம் அவருக்கு வந்தது.
2016இல் அவருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019 மக்களவைத் தேர்தலிலும் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதிருப்தியில் இருந்த குஷ்பு பாஜக அரசின் முத்தலாக் தடைச் சட்டத்தை ஆதரித்தார். புதிய கல்விக் கொள்கையை உயர்த்திப் பிடித்தார். எப்போது வேண்டுமானாலும் தாவிவிடுவார் என்ற பிம்பத்தைக் கொடுத்தார். நானா பாஜக போகிறவள் என்று ஒரு கூட்டத்தில் கூறிய இரண்டு நாளில் பாஜகவில் அடைக்கலம் ஆனார் அவர்.
தமிழகத்தில் தாமரை மலரும் என்று இரண்டாவது தமிழிசையாக மாறி நிற்கிறார் குஷ்பு இப்போது. கணவர் சுந்தர் சியின் கடன்களுக்குத் தீர்வு தருவதற்கு குஷ்பு பாஜகவுக்கு மாறினார் என்றெல்லாம் வதந்திகள் உண்டு. குஷ்புவுக்கும் ஒரு தொகை பேசப்பட்டது என்றும் சாடியவர்கள் உண்டு. கன்னியாகுமரில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் உறுதி தரப்பட்டதாக ஒரு செய்தி உலவுகிறது.
பாஜக இன்னும் தமிழகத்தில் ஒரு வளரும் கட்சிதான். பெரிய கட்சிகளுக்கு இடையே பாஜக தலை நிமிர்த்த இன்னும் காலம் ஆகும்.
ஆனால் அரசியலில் நிலைபெற துடிக்கும் பதற்றம் காரணமாக குஷ்பு மாறி மாறிக் கால் வைத்திருக்கிறார். சேர்ந்த அடுத்த நாளே தான் ஒரு பெரியாரிஸ்ட் என்று பிரகடனம் செய்தார் குஷ்பு. காங்கிரஸ்காரர்களை மனநிலை சரியில்லாதவர்கள் என்று கூறி மன்னிப்புக் கோரினார்.
பாஜகவிலும் குஷ்பு அமைதியாக இருந்துவிட மாட்டார். எங்கு இருக்கிறாரோ அங்கு இருக்கும் நிலைமைக்கு எதிராக கருத்தைச் சொல்வதுதான் அவருக்கு வாடிக்கையாக இருக்கிறது. பாஜகவிலும் அது வெளிப்படும். அங்கும் குட்டு வாங்குவார் குஷ்பு.
குஷ்புவுக்கு சுதந்திரமான சிந்தனை உண்டு. ஆனால் அது வரைமுறையுடன் இல்லை. குஷ்புவுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு இல்லை. எங்கு சென்றால் தன் புகழ் உயரும், தனக்கு அதிகாரம் கிடைக்கும் என்ற படபடப்புதான் அவரிடம் மிகுந்து கிடக்கிறது.
ஒரு திரை நட்சத்திரமாக படத்திற்குப் படம் வேடம் மாறுவது ஏற்புடையதுதான். ஆனால் அரசியலில் ஒரு கொள்கையை ஒரு அரசியல்வாதி வெளிப்படுத்த வேண்டும்.
ஆனால் குஷ்பு ஒரு பக்குவமான அரசியல்வாதியாக இதுவரை வெளிப்படவில்லை.
ஒரு பண்பட்ட அரசியல்வாதியாக குஷ்பு மாறினால் அவருடைய எதிர்காலம் பிரகாசிக்கும்.
இல்லாவிட்டால் படபடப்புடன் அடங்கிவிடும்.