அனிதா பால்துரை. இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்தாட்ட வீரர். தனது 19ஆவது வயதில் இந்தியக் கூடைப்பந்தாட்ட அணியின் இளம் வயது கேப்டனாக வலம் வந்த பெருமைக்குரியவர் அனிதா. எட்டு ஆசிய கூடைப்பந்து கூட்டமைப்பு (ஏபிசி) சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியப் பெண்மணி அனிதா.
2021 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருது அனிதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக அர்ஜுனா விருது பெற அனிதா முயன்று வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்ம விருது பெற முயன்றார் அவர். இந்த ஆண்டு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
‘பத்மஸ்ரீ விருதை நான் எனக்கான அங்கீ காரமாகப் பார்க்கவில்லை. கூடைப்பந்து விளையாட்டிற்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். ஒரு விளையாட்டிற்கு அங்கீகாரம் கிடைத்தால் அதில் மற்றவர்களுக்கும் ஆர்வம் வரும். இந்த விருதினால் எனக்குக் கிடைத்த சந்தோஷத்தை என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது’ என கூறுகிறார் அனிதா.
திருநெல்வேலியைச் சொந்த ஊராகக் கொண்ட அனிதா சிறுவயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தாராம். அனிதாவின் தந்தை காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றினார். அனிதா தனது 11 வயதில் கூடைப்பந்து விளையாடத் தொடங்கினாராம்.
‘எனக்கு தடகளப் போட்டிகள் மிகவும் பிடிக்கும். பள்ளியில் படிக்கும் போதிருந்தே தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்குவேன். ஆனால் அப்போது கூடைப்பந்தாட்டத்தில் அவ்வளவு ஆர்வமில்லை. என் பள்ளியின் கூடைப்பந்து பயிற்சியாளர் இந்த விளையாட்டை முயற்சி செய்து பார்க்கக் கூறினார். கூடைப்பந்து விளையாட ஆரம்பித்ததும், அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி எடுக்க தொடங்கினேன்’ என மனம் திறக்கிறார் அனிதா பால்துரை.
சென்னைப் பல்கலைக்கழ கத்தில் வணிகவியலில் பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் பட்டமும் பெற்றுள்ளார் அனிதா.
அனிதா 2003ஆம் ஆண்டு தெற்கு ரயில்வேயில் சேர்ந்தார். தற்போது தலைமை பயணச்சீட்டு அதிகாரியாகப் பணிபுரிகிறார் அனிதா.
2012இல் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழிற் சார் லீக் போட்டிக் காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அனிதா. ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் 2006, ஆசிய விளையாட்டு 2010 போன்ற பெரிய போட்டிகள் உட்பட பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார் அனிதா.
மேலும் அனிதா தேசிய விளையாட்டுகளில் 10 தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். 2013 இல் தோஹாவில் நடைபெற்ற முதல் மூன்று ஃபிபா ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்றார் அவர். 2011 இல் இலங்கையில் நடைபெற்ற தெற்கு ஆசிய கடற்கரை ஆட்டங்களில் அணியின் தலைவராகப் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
எட்டுமுறை இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக மகுடம் சூட்டியவர் அனிதா.
‘2017 ஆம் ஆண்டு சமயத்தில் நான் ஒரு குழந்தைக்குத் தாய். என் டீமில் அனைவரையும் ஒருங்கிணைத்து விளையாடும்போது தாய்மை உணர்வு வெளிப்பட்டது’ என விவரிக்கிறார் அனிதா.
‘இப்போது பெற்றோர்களுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பெண் களை விளையாட்டில் சேர அனுமதிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அரசும் வேலைவாய்ப்புகள், நிதி உதவி போன்ற பல சலுகைகளைத் தருகிறது’ எனக் கூறுகிறார் அனிதா.
தற்பொழுதும் அனிதா கூடைப்பந்தாட்டப் பயிற்சியைத் தொடர்கிறார். பயிற்சியாளராகத் தன் பரிணாமத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டுள்ளார் அனிதா.
‘கூடிய விரைவில் பயிற்சியாளராக என் அனுபவத்தை மற்றவருக்குப் பயன்படுமாறு வெளிப்படுத்துவேன்’ எனக் கூறுகிறார் அனிதா.
குடும்பம், விளையாட்டு இரண்டையும் எப்படி சமாளிக்கிறார் எனக் கேட்டால், ‘பெண்களுக்கு உண்மையான சவாலே திருமணத்திற்குப் பிறகுதான் தொடங்குகிறது. நான் இதுவரை விளையாட்டிற்காகக் குடும்பத்தை விட்டுக் கொடுத்ததில்லை. அப்பொழுதுதான் அவர்களும் சந்தோஷத்தோடு எந்தத் தயக்கமும் இல்லாமல் நமக்கும் நம் ஆசைக்கும் துணையாக நிற்பர்’ எனக் கூறுகிறார் அனிதா.
‘பெண்களுக்கு விளையாட்டில் மட்டு மல்ல, சாதாரணமாக சாலையில் சென்றால்கூட நிறைய தடைக்கற்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தாண்டி வர வேண்டும். முக்கியமாக, ஒருபோதும் காரணம் சொல்லி நழுவக்கூடாது. இது என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இறங்கினால் கண்டிப்பாக வெற்றி காண முடியும்’ என இளம் பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறார் அனிதா பால்துரை.