அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் உவால்டி என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற சல்வடார் ரோமோஸ் என்ற 18 வயது இளைஞன், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இந்த தாக்குதலில் 19 மாணவர்கள், 2 பெரியவர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு ஆசிரியரும் அடங்குவார். முன்னதாக, துப்பாக்கிச்சூடு தொடங்கியபோது அருகில் இருந்த அமெரிக்க எல்லைக் காவல் அதிகாரி ஒருவர் பள்ளிக்குள் விரைந்தார். அப்போது அங்கு இருந்த தடுப்புக்கு பின்னால் இருந்த துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை அந்த காவலர் சுட்டுக் கொன்றார். சான் ஆன்டோனியோ நகரில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்த அந்த இளைஞன், வீட்டில் இருந்து கிளம்பும்முன் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். இந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் மற்றும் வேறு ஏதேனும் காரணங்களுக்காக இந்த துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு எதிராக கடவுளின் பெயரால் நாம் அனைவரும் உறுதியுடன் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.