பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்ப்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்தில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. 31 ஆண்டுகால போராட்டம் எல்லாரும் ஆதரவு கொடுத்துள்ளனர். 31 ஆண்டுகள் மனிதனின் வாழ்க்கை சிறையில் கழிந்தது அதன் வலியும் வேதனையும் அனைவரும் சிந்திப்பதன் மூலம் புரியும். இந்த அரசு, தொடர்ந்து பரோல் வழங்கியது. அதனால், பேரறிவாளன் உடல் நிலையை கவனிக்க முடிந்தது. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார். பின்னர் பேரறிவாளன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு பெரிய வழக்கறிஞர்கள் எல்லாம் வாதாடி தீர்ப்பை பெற்று தந்தனர். மரண தண்டனை காலத்தில் எங்களுக்கு துணையாக வழக்கறிஞர்கள் இருந்தனர். நன்றி சொல்ல அனைவருக்குமான பட்டியல்கள் உள்ளது. வாழ்நாளில் வாய்ப்பு கிடைக்கும் போது என் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறுவேன். ஊடகங்களால் தான் விடுதலையானேன். எல்லா துறையினரும், உதவியாக இருந்தனர். நான் நேரில் வந்து அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவேன். 31 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தினோம். நான் என் குடும்பத்தினருடன் இருக்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கையே சட்டபோராட்டம் தான். திறம்பட சட்டபோராட்டம் நிகழ்த்தினோம். அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அனில் திவான் போன்றோர் எல்லாம் உதவினார்கள். இந்த விடுதலையை சாத்தியப்படுத்த ஆறு ஆண்டுகளாக எந்த பொருளாதாரத்தையும் எதிர்பார்ப்பில்லாமல் மூத்த வழக்கறிஞர் கோபால சங்கர நாராயணன் உதவினார். இந்த விடுதலை சாத்தியப்படுத்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உதவிய வழக்கறிஞர்களுக்கு நன்றி. பேரறிவாளன் நிரபராதி என தியாகராஜன் ஐ.பி.எஸ் வெளிப்படையாக பேட்டி அளித்து உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். நியாயம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இது எங்கள் போராட்டம் மட்டுமல்ல, எல்லாரும் எங்களுக்கு சக்தியை மீறி ஆதரவு தெரிவித்து உழைத்து எங்களுக்காக துன்பப்பட்டுள்ளனர்” அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.