அட்சய திருதியை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகைக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில், நேற்றைய விற்பனை குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் செல்லானி கூறுகையில், அட்சயதிருதியையான நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் நகைகளை வாங்க கடைக்கு வந்து கொண்டே இருந்தனர். தவிர, கொரோனா காரணமாக நகைக்கடைகள் கடந்த 2 ஆண்டுகளாக மூடி இருந்ததால் அட்சயதிருதியை நாளில் நகைகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த ஆண்டு கொரோனா தளர்வுகள் காரணமாக நகைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் நகைகளை வாங்கினர். இதனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 சதவீதம் வரை விற்பனை அதிகரித்து உள்ளது. மேலும், கடந்த ஆண்டைவிட தங்கம் சவரனுக்கு ரூ. 2,400 அதிகரித்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 18 டன் அளவுக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.