வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள சேர்க்காடு கூட்ரோட்டில், மேல்பாடியை சேர்ந்த அனில்குமார் என்பவருக்கு சொந்தமான அடகு கடை உள்ளது. கடையை நேற்று முன்தினம் வழக்கம் போல மூடிவிட்டு, நேற்று மீண்டும் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையில் திருட்டு நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. நகை அடகு கடை பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்டு அந்த வழியாக நகை கடைக்கு உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் நகை கடைக்கு உள்ளே இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை தொடர்பாக திருவலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எட்டு ஆண்டுக்கு முன் இதே நபரின் கடை மேல்பாடி பகுதியில் திருடு போனது என்பது குறிப்பிடத்தக்கது.