day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அஞ்சாத வங்கப்பெண்! – மஹுவா மொய்த்ரா

அஞ்சாத வங்கப்பெண்! – மஹுவா மொய்த்ரா

 

இலக்கியத்துக்குப் பேர்போன வங்க மண்ணிலிருந்து அரசியலுக்குள் புயலெனப் புகுந்து  களமாடிக்கொண்டிருக்கிறார் மஹுவா மொய்த்ரா. அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் சொல்லிப் பல ஆண்டுகளாக நாம் போராடிவந்தாலும் பெண் அரசியல்வாதிகள் அனைவருமே நமக்கு நம்பிக்கை தரும்விதத்தில் மக்கள் சேவை செய்வதில்லை. ஆனால், மஹுவா மொய்த்ரா தன் தீர்க்கமான அரசியல் பார்வையால் பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்கிறார். அவரது கேள்விக்கனைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமைதிகாக்கும் அமைச்சர்களே அதிகம்

கொல்கத்தாவில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தவர் கணிதம், பொருளாதாரம் இரண்டையும் அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் படித்தார். வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. உலகின் பெரிய முதலீட்டு வங்கியான ஜே.பி. மார்கன் சேஸ் நிறுவனத்தில் சேர்ந்து லண்டனிலும் நியூயார்க்கிலும் பணியாற்றினார். படிப்படியாக முன்னேறி அந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக உயர்ந்தார். அப்போதுதான் அந்த முடிவை மஹுவா எடுத்தார். 2009இல் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்குள் நுழைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவில் இணைந்து இந்தியாவில் தன் அரசியல் பயணத்தை 2009இல் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே ராகுல்காந்தியின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். தேசிய இளைஞர் காங்கிரஸின் மிக முக்கியமான திட்டப் பணிகள் மஹுவாவுக்குக் கொடுக்கப்பட்டனஓராண்டுகூட நிறைவடையாத நிலையில் காங்கிரஸ் கட்சியிலியிருந்து விலகி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2016இல் நடந்த சட்டசபை தேர்தலில் நாடியா மாவட்டத்தின் கரிம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனிடையே 2019இல் நடந்த இந்தியாவின் 17ஆம் பாராளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், 17 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நாடியா மாவட்டத்தின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.  

பாராளுமன்ற உறுப்பினரான பிறகு மஹுவாவைப் பற்றி செய்தி வெளியாகாத நாட்கள் குறைவு என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு அரசியலில் தவிர்க்க முடியாத பெண் சக்தியாகத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார் மஹுவா. முகநூலில் மஹுவா ரசிகர்கள் என்று தனிப்பக்கம் தொடங்குகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கிறார் மஹுவா. அறிவும் தெளிவும் நிறைந்த அவரது ஆக்கபூர்வமான அணுகுமுறைதான் இதற்குக் காரணம். பாராளுமன்றத்தில் அவர் நிகழ்த்திய கன்னி உரையே அதற்குச் சான்று.  

பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு மஹுவா தன் முதல் பேச்சிலேயே ஆளும் பா... அரசைக் கடுமையாகச் சாடினார். இந்த அரசு பாசிசத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக ஏழு அறிகுறிகளைச் சுட்டிக்காட்டினார். மஹுவாவின் இந்தப் பேச்சுக்குப் பலதரப்பினரிடமிருந்தும் பாராட்டுக் குவிந்தபோதும் கண்டனங்களும் எழுந்தன. வாஷிங்டன் மாத இதழில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை விமர்சித்து, ‘பாசிசத்தின் 12 அறிகுறிகள்என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் காப்பியடித்துப் பேசினார் மஹுவா என்று பலர் விமர்சித்தனர். ஆனால், அந்தக் கட்டுரையை எழுதிய அமெரிக்காவின் அரசியல் விமர்சகர் மார்ட்டின் லாங்மேன், மஹுவாவுக்கு ஆதரவாக நின்றார். “இந்தியாவின் அரசியல் பிரபலம் நான் எழுதிய கட்டுரையை காப்பியடித்ததாகத் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அதனால், இந்தியாவின் இணைய உலகில் நான் பிரபலமடைந்துவிட்டேன். இதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஆனால், வலதுசாரிகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் செயல்படுகிறார்கள்என்று ட்வீட் செய்திருந்தார். அதன் பிறகுதான் விமர்சன அலை அடங்கியது.

மஹுவா கையிலெடுக்கிற ஒவ்வொரு பிரச்சினையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்ததாகவே இருப்பது அவரது செல்வாக்கு அதிகரிக்க மற்றுமொரு காரணம். குடியுரிமைச் சட்டம் குறித்து அவர்  முன்வைத்த பிரச்சினைகளை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. “நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் தங்கள் கல்விச் சான்றிதழைச் சமர்ப்பிக்க இயலாத நாட்டில்தான் ஏழை குடிமக்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்கச் சான்று தேவைப்படுகிறதுஎன்று சொல்வதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். மஹுவாவுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது. அதனால்தான் இன்றுவரை நின்று களமாடுகிறார்.

பாஜக அரசு மதச் சார்புடன் செயல்படுகிறது என்பதைத்தான் தனியாகச் சொல்லத்தேவையில்லை என்று சொன்ன மஹுவா, “அதற்கு குடியுரிமைச் சட்டத் திருத்தமே சான்று. இதன்மூலம் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே திட்டமிடப்பட்டு குடியுரிமை மறுக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளலாம்என்றார்

ஒரே தேசம் ஒரே மொழி என்பதில் நம்மில் பலருக்கும் உடன்பாடு இல்லாததுபோலவே மஹுவாவுக்கும் இல்லை. அதனால்தான் ஒரே நாடு, ஒரே முழக்கம் என்கிற சங்கிகளின் கொள்கையை அவர் எதிர்க்கிறார். “பிரதமர் அவர்களே, நீங்கள் அமைக்கவிருப்பதாகக் கனவு காணும் இந்தியாவில் சூரியன் மறையாது என்கிறீர்கள். ஆனால், அது நடக்காமல் இருப்பதற்கான அறிகுறிகளை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள். ஒரே நாடு, ஒரே முழக்கம் என்கிற பெயரில் இந்த நாடு துண்டாடப்படுவதை நீங்கள் அறியவில்லையா?” என்று தன் கன்னிப் பேச்சில் மஹுவா கேட்டார்.

யாருக்கோ எங்கோ நடப்பதுதானே நமக்கென்ன என்று அவர் இருந்துவிடவில்லை. இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் சிறுபான்மையினர் மீதும் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு வன்முறையும் நாளை யார்மீது வேண்டுமானாலும் நிகழ்த்தப்படலாம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால்தான் இந்தியாவில் தலைவிரித்தாடும் மனித வெறுப்பு மற்றும் கும்பல் வன்முறை குறித்துக் கனல் தெறிக்கப் பேசினார். “எப்போதும் இல்லாத வகையில் தற்போது அரசு அமைப்பின் ஒவ்வொரு படிநிலையிலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. 2014 முதல் 2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வன்முறை பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. பட்டப்பகலில் நடு வீதியில் சிறுபான்மையினரைக் கும்பலாகச் சேர்ந்து கொல்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறதுஎன்று மஹுவா சொன்னதற்கு யாரிடமும் பதிலும் இல்லை, விளக்கமும் இல்லை

செய்தி ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு நாட்டில் நடக்கும் அநீதிகளை மறைக்கும் அரசின் தந்திரச் செயலையும் மஹுவா கண்டித்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பொய்ச் செய்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டுவருவதையும் நிரூபித்தார்

அறிவுஜீவிகளும் அரசின் செயலைக் கண்டிக்கும் கலைஞர்களும் தேடித்  தேடி வேட்டையாடப்படுவதையும் மஹுவா குறிப்பிட மறக்கவில்லை. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதிகள் குறைக்கப்படுவது, அடித்தட்டு மக்களுக்குக் கல்வி உரிமையை மறுக்கும் செயல் என்றார். கல்விதானே மக்களுக்கு விழிப்பு தரும். அந்த விழிப்பு கிடைக்காமல் செய்துவிட்டால் மக்கள் எப்போதுமே அடிமையாக இருப்பார்கள்; அதைத்தான் இந்த அரசும் எதிர்பார்க்கிறது என்பதையும் மஹுவா தன் கன்னிப் பேச்சில் வெளிப்படுத்தினார்

பதவியேற்ற நாள் தொடங்கி இன்றுவரை அநீதிக்கு எதிரான குரலை மஹுவா நிறுத்திக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும் உடனுக்குடன் மறந்துவிடும் சமூகத்துக்கு மஹுவாவைப் போன்ற அரசியல்வாதிகள் சிலவற்றை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டி ருப்பதும் நல்லதுதான். அண்மையில் பிரதமரின் பேச்சுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மஹுவா, பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியைப் பற்றி சிலவற்றைக் குறிப்பிட்டார்

புனிதப் பசுவாகக் கொண்டாடப்பட்ட நீதித்துறை இப்போது அதன் புனிதத்தன்மையை இழந்துவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோதும், அந்த வழக்கை அவரே நடத்தியபோதும், அதிலிருந்து அவரே விடுதலையடைந்தபோதும்  நீதித்துறை தன் புனிதத்தை இழந்தது. பிறகு அவர் ஓய்வுபெற்ற மூன்றே மாதங்களுக்குள் நாடளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டபோதும் நீதித்துறை தன் புனிதத்தை இழந்தது. நாட்டின் அரசமைப்பைக் காக்க வேண்டியதை மிக மோசமாகக் கைவிட்டபோது தன் புனிதத்தை இழந்ததுஎன்று நாடாளுமன்றத்தில் மஹுவா கர்ஜித்தார்

அவர் பேசும்போதே ஆளும்கட்சி உறுப்பினர்கள் பலர் இடையிட்டனர். உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கிறவர்கள் மீது இப்படிக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பேசுவது நாடாளுமன்ற நடத்தை விதிகளுக்கு எதிரானது எனவும் மஹுவாவின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படியும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னார்கள். ஆனால், அதற்கெல்லாம் மஹுவா சளைக்கவில்லை.

இங்கே வெறுப்பரசியலும் மதவெறியும் தலைவிரித்தாடுகின்றன. கோழைத்தனத்தை வீரம் என்று பொய் பிரச்சாரம் செய்யும் வேலை இங்கே கச்சிதமாக நடக்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கிறவர்களும் அரசாங்க விவகாரங்கள் குறித்து கருத்துச் சொல்கிறவர்களும்  காவல் துறையால் எத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிகாரம், வெறுப்பரசியல், மதவெறி, பொய் பிரச்சாரம் போன்றவற்றின் பின்னால் ஒளிந்துகொண்டு செயல்படுவதுடன் அதையே வீரம் என்று பிரகடனப்படுத்துவதில்தான் இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. நான் இப்படிப் பேசுவதற்காக என்மீது நாடாளுமன்ற நடத்தை விதிமீறல் வழக்குத் தொடுப்பதென்றால் தொடுங்கள். இந்தியாவின் இந்த இருண்ட காலத்தில் உண்மை பேசியதற்காக இப்படியொரு நடவடிக்கை என் மீது எடுக்கப்படுவதில் நாம் பெருமைகொள்வேன்என்றும் மஹுவா சொல்லியிருக்கிறார்.

கொடுமை கண்டு பொங்காத மனங்களால் அவர்களுக்கேகூட நன்மையில்லை. எந்தச் சூழலிலும் அநீதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதாலேயே யாருக்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச்செருக்குடன் இருக்கிறார் மஹுவா மொய்த்ரா.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!