இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் கடந்த வெள்ளி முதல் 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கச்சார் மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி கடந்த வெள்ளி முதல் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது. இதுவரை சுமார் 2,00,000க்கும் மேலான மக்கள் 20 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கனமழையால் உருவான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 33,000த்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்ய முகாம்களையும் அந்த மாநில அரசு ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதுவரை இந்த வெள்ளத்தில் மூழ்கி சுமார் 16,000 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நாசமாகி உள்ளது. முன்னதாக அசாம் மாநிலத்தின் பிராதான பாலங்களில் ஒன்றான டிமா ஹசாவ் பாலம் அடித்துச்செல்லப்பட்டு உள்ளது. ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகள் இருந்த இடம் தெரியாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 நீர்நிலைகளின் கரைகள் உடைந்துள்ளன. பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் சில வீடுகள் முற்றிலும் அல்லது பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக களதகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தநிலையில், அசாமில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பாதிப்பு இன்னும் அதிகமாக கூடும் என்பதால் மாநில நிர்வாகம் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.