தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்தவாரம் நிலவிய ’காற்றழுத்த தாழ்வு பகுதி’யானது ’ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி’யாக தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ’காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுபெற்றது. மேலும் இது கடந்த 8ஆம் தேதி ’குறைந்த காற்றழுத்த புயலாக’ மாறியது. வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வட ஆந்திரா-ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடையை குளிர்விக்க வந்துள்ள இந்த புயலுக்கு இலங்கை வானிலை ஆய்வு மையம் ’அசானி’ என பெயரிட்டுள்ளது. சிங்கள மொழியில் அசானி என்றால் ’பெருஞ்சினம் என்று பொருளாம். மேலும் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் என பல இடங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கொடையில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக்கொண்டு இருந்த மக்களையும் மண்ணையும் பெருஞ்சினம் என்ற பொருள் கொண்ட அசானி சாந்தப்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கோடைமழையை மக்கள் அனைவரும் வரவேற்று மகிழ்ந்து வருகின்றனர்.