செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அசானி புயல் காரணமாக கனமழை பெய்தது. அப்போது, திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 25க்கும் மேலான நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகள் சேகரித்து வைத்திருந்த நெல் மூட்டைகள் மற்றும் அரசு கொள்முதல் செய்து வைத்திருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து நாசமாயின. மேலும் இடப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அந்த பகுதியில் திறந்தவெளியில் தார் பாய் போட்டு மூடி வைத்து இருந்தனர். கனமழையுடன் காற்றும் பலமாக வீசியதால் நெல் மீது போடப்பட்டு இருந்த தார் பாய் பறந்துபோய் நெல் நனைந்து நாசமாகியது. இதனால், நூறு டன்னுக்கு மேலான நெல் மழையில் நனைந்து வீணாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அரசே நனைந்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து அரவைக்கு அனுப்ப விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.