கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், 62வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை நடைப்பெற்றது. இந்தபோட்டியில், சென்னை இந்தியன் வங்கி, டில்லி ஏர்போர்ஸ், சென்னை டி.என்.பி.ஏ., திருவனந்தபுரம் கே.எஸ்.இ.பி., பெங்களூரு பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட, 10 அணிகள் பங்கேற்று இரவு பகலாக நடைபெற்றது. இந்தநிலையில் செமி பைனலுக்கு இந்தியன் நேவி அணியும், இந்தியன் வங்கியும் விளையாடின. இதில் இந்தியன் நேவி அணி 92 புள்ளிகளுடன் முதலிடத்தினையும், இந்தியன் வங்கி 85 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றது. முன்னதாக, இந்த அரையிறுதி ஆட்டத்தினை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், இந்த ஆட்டத்தில் டாப் ஸ்கோர் ஆட்டக்காரர்களாக இந்தியன் நேவி அணியினை சார்ந்த மண்டீப் சிங் 30 புள்ளிகளையும், இந்தியன் வங்கி அணியினை சார்ந்த பால தானேஸ்வர் 22 புள்ளிகளையும் பெற்றனர். இந்த போட்டியினை காண கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.